மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42), பிளம்பர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கோபாலகிருஷ்ணன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
நேற்று காலை வீட்டின் அருகே கூடல்விளையில் உள்ள கால்வாயில் கோபாலகிருஷ்ணன் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கோபாலகிருஷ்ணன் வேலை முடிந்து மதுபோதையில் வீட்டுக்கு வரும் போது கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments