பிக்பாக்கெட் அடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், பிரபல ரவுடி கொலை!

பிக்பாக்கெட் அடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், பிரபல ரவுடி கொலை!

in News / Local

பிக்பாக்கெட் அடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல ரவுடி மற்றொரு ரவுடியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது,

இந்நிலையில், வடசேரியில் அமைந்துள்ள இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான சித்ரா நூல் நிலைய வளாகத்தில் சிவகுமார் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார், அவர் அருகிலேயே
மற்றொரு பிரபல ரவுடி ஜான் குற்றுயிரும் குலையுயிருமாக அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார், நூல்நிலையத்திற்கு வந்தவர்கள் முனங்கள் சப்தம் கேட்டு சென்று பார்த்த போது ஒருவர் பிணமாகவும் மற்றொருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதையும் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்,

தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஜானை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவகுமார் மற்றும் கொலையாளி ஜான் ஆகிய இரண்டு பேரும் இணைந்து அண்ணா பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் மது அருந்தி விட்டு மீதம் உள்ள பணத்தை பங்கு வைப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜான் சிவகுமாரை பாட்டில் கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கி கொலை செய்துள்ளார்,

சம்பவத்தின் போது சிவகுமார் திருப்பி தாக்கியதில் ஜான் படுகாயம் அடைந்த அங்கேயே மயங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது, இது குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட ரவுடி சிவகுமார் மீது கோட்டார், வடசேரி, நேசமனிநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top