தக்கலையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் - 500 பேர் கைது!

தக்கலையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் - 500 பேர் கைது!

in News / Local

பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 48 குடியிருப்புகள் கடந்த மாதம் திடீரென இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், குடியிருப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்தும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில், போராட்டத்துக்கு அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை. எனினும் போலீசார் தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க.வினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரண்டனர். பின்னர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜெயன், பெருங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன், குழித்துறை நகர செயலாளர் பொன்.ஆசைதம்பி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் திடீரென நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 69 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி கொண்டு அருகில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top