எஜமானை தாக்கிய கரடியுடன் சண்டையிட்டு அவரை காப்பாற்றிய நாய்கள்!

எஜமானை தாக்கிய கரடியுடன் சண்டையிட்டு அவரை காப்பாற்றிய நாய்கள்!

in News / Local

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 60). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் பொய்கை அணையின் மேல் பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் முந்திரி மரம், மா, பலா, தென்னை போன்றவற்றை பயிரிட்டிருந்தார். மேலும், அவர் தனது வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகிறார். தோட்டத்துக்கு செல்லும் போது இந்த நாய்களை அழைத்து செல்வது வழக்கம்

நேற்று முன்தினம் மாலை தேவசகாயம் முந்திரி கொட்டைகள் பறிப்பதற்காக தனது 3 நாய்களுடன் தோட்டத்துக்கு சென்றார். தோட்டத்திற்கு சென்றதும், அவர் அங்கு கீழே விழுந்து கிடந்த முந்திரி கொட்டைகளை பொறுக்கி கொண்டிருந்தார். நாய்கள் அவரிடம் இருந்து சற்று தொலைவில் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தன.

அப்போது, திடீரென தோட்டத்திற்குள் புகுந்த ஒரு கரடி தேவசகாயத்தின் பின்னால் சென்று அவரது முதுகில் ஓங்கி அடித்தது. உடனே, தேவசகாயம் திரும்பி பார்த்த போது பின்னால் கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் சத்தம் போட்ட நிலையில் கரடியிடம் இருந்து தப்பிக்கும் வகையில் ஓடினார். ஆனால், கரடி அவரை விடாமல் துரத்தி சென்று கையால் அடித்தும், பற்களால் கடித்தும் தாக்க தொடங்கியது.

தேவசகாயத்தின் சத்தம் கேட்டு அவருடன் சென்ற 3 நாய்களும் ஓடி வந்தன. அவைகள் எஜமானை காப்பாற்றுவதற்காக கரடியை சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. உடனே, கரடி தேவசகாயத்தை விட்டுவிட்டு, நாய்களை தாக்க தொடங்கியது. ஆனால், 3 நாய்களும் சேர்ந்து கரடியை துரத்தி துரத்தி கடித்தன.

இறுதியில் நாய்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கரடி தப்பி ஓடியது. கரடி தாக்கியதில் தேவசகாயத்தின் கை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் செல்போன் மூலம் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். உறவினர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எஜமானை காப்பாற்றுவதற்காக கரடியுடன் நடத்திய போராட்டத்தில் நாய்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கரடி துரத்தி துரத்தி தாக்கியது. மேலும், தொழிலாளர்கள் பலரும் கரடி தாக்கி காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top