சுசீந்திரம் அருகே கத்தரிக்கோலால் குத்தி முதியவரை கொன்ற வாலிபர் கைது!

சுசீந்திரம் அருகே கத்தரிக்கோலால் குத்தி முதியவரை கொன்ற வாலிபர் கைது!

in News / Local

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே புதுகிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர் மதன் என்ற மாணிக்ககுமார் (26).

மாணிக்கத்தை, மதன் அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு மாணிக்கம், மூத்தோர்களை மதித்து நடக்க வேண்டும், இந்த மாதிரி நடக்காதே என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மதன், மாணிக்கம் கூறியதை சற்றும் பொருட்படுத்தாமல் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை மாணிக்கம் அதே பகுதியில் உள்ள தன்னுடைய மகனின் வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு இந்த தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அவருக்கு எதிரே வந்த மதன் எப்போதும் போல், மாணிக்கத்தை மதன் கேலி, கிண்டல் செய்தார். ஆனால் இந்த தடவை மாணிக்கத்திற்கு கோபம் வரவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபத்தில் மாணிக்கம், மதனை கண்டபடி திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மதன் அருகில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றார். அங்கிருந்தா கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு மாணிக் கத்தை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவருடைய தலை மற்றும் உடலில் சரமாரியாக குத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணிக்கம் படுகாயத்துடன் அங்கேயே நிலைகுலைந்து, கீழே சாய்ந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து சுசீந்திரம் போலீசார் மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். கேலி, கிண்டல் செய்ததில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top