பூதப்பாண்டி அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூதப்பாண்டி அருகே வீரவநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெனிட் பிரகாஷ் (வயது 27). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு, அரசு வேலைக்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். பலமுறை முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. இதனால், கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என ஜெனிட் பிரகாஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனிட் பிரகாஷ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ஜெனிட் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜெனிட் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments