அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு

அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு

in News / Local

ஏழுதேசம் பேரூராட்சியில் வாக்கு எந்திரத்தில் முகவர்கள் சீல் வைக்க அனுமதி மறுத்ததால் நள்ளிரவில் அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 234-வது தொகுதியாக உள்ளது கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதிக்கு உட்பட்ட ஏழுதேசம் பேரூராட்சி பகுதியில் மாம்பழஞ்சி அரசு தொடக்கப்பள்ளியில் 46, 48 எண் கொண்ட பூத்துகளை ஆண்கள்- பெண்கள் என இரண்டு, இரண்டாக பிரிக்கப்பட்டு 4 வாக்குச்சாவடிகள் செயல்பட்டன. இந்த 4 வாக்குச்சாவடிகளிலும் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முகவர்கள் பலர் நேற்று முன்தினம் காலை முதலே தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மாலை தேர்தல் முடியும் வரை எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடியில் இருந்த அரசியல் கட்சி முகவர்கள் வாக்குகளை சரிபார்த்து வாக்கு எந்திரத்தை அதிகாரிகள் சீல் வைத்த பின், முகவர்களும் தங்களது கட்சியின் சார்பில்  சீல் வைக்க முயன்றனர். அப்போது, தேர்தல் கண்காணிப்பு பணியில் இருந்த பெண் அலுவலர் ஒருவர் முகவர்களை சீல் வைக்க விடாமல் தடுத்துள்ளார்.

இதனால், அரசியல் கட்சியினர் வாக்கு எந்திரத்தை வெளியே எடுத்து செல்ல விடாமல் அதிகாரிகளை சிறை பிடித்தனர். இதனால், அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பலமணி நேரமாக வாக்கு எந்திரத்தை எடுத்து செல்ல முடியாமல் அதிகாரிகள் திணறியபடி வாக்குச்சாவடிக்குள் காத்திருந்தனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நித்திரவிளை போலீசார், போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்களை கொண்டு தாசில்தார் முன்னிலையில் வாக்கு எந்திரங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு சென்றனர். இச்சம்பவத்தால் மாம்பழஞ்சி அரசு தொடக்கப்பள்ளி பரபரப்பாக காணப்பட்டது. 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top