விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் நடப்பு ஆண்டில் குமரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விதைக்க இயலாமை மற்றும் விதைப்பு பொய்த்து போகும் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன்பெறாத விவசாயிகள் குமரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனமான வேளாண் காப்பீடு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
கன்னிப்பூ பருவத்தில் நெல், உளுந்து பயிர்களுக்கு இந்த திட்டத்தில் பதிவு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். வாழை, மரவள்ளி பயிர்களுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, விவசாயிகள் காப்பீடு தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிர் காப்பீடு தொகையில் விவசாயிகள் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.623, உளுந்து பயிருக்கு ரூ.331, வாழை பயிருக்கு ரூ.3,960, மரவள்ளி பயிருக்கு ரூ.1,288-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும் போது முன்மொழி விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments