கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்!

கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்!

in News / Local

சுசீந்திரம் தெற்கு குளப்புரவு விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று கருகிய நெற்பயிர்களுடன் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கருகிய நெற்பயிரைக் காட்டி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுசீந்திரம் குளத்துக்கு பழையாறு தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று 800 ஏக்கர் விளை நிலங்களில் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல பழையாறு சபரி அணையில் இருந்து பறக்கை பாசன குளம், பால்குளம், தெங்கம்புதூர் பாசன குளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு வந்து சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த பல ஆண்டாக பறக்கை கால்வாய் தூர்வாரப்படாததால், பறக்கை பாசன குளம், பால்குளம், தெங்கம்புதூர் குளம் ஆகியவற்றுக்கு சுசீந்திரம் பாசன குளத்தின் தெற்கு பகுதியில் இருந்து புதிதாக தற்காலிக மடை அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பறக்கை கால்வாயை தூர்வார அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் சுமார் 800 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கன்னிப்பூ நெற்பயிர்கள் பொதி பருவத்தில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் சுசீந்திரம் பாசன குளத்தின் அனைத்து மடைகளையும் அடைத்துவிட்டு பறக்கை குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து சுசீந்திரம் குளத்தின் மடைகளை அடைக்காமல் பறக்கை குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனாலும் மடையை அடைத்துள்ளனர். எனவே சுசீந்திரம் குளத்தின் மடையை திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top