கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கவேண்டும்:  விவசாயிகள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டர் பரப்பளவில் தற்போது நெல்சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் ரப்பர், தென்னை, வாழை மற்றும் பணப்பயிர்கள் என தோட்டக்கலை பயிர்கள் சுமார் 65 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முக்கிய தொழிற்சாலைகள் எதும் இல்லை. விவசாயத்தை செய்யும் பலர் தங்கள் தலைமுறைக்கு பிறகு விவசாயம் தேவையில்லை என கருதி அவர்களது குழந்தைகளை வேறு படிப்புகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் விளைநிலங்களின் பரப்பளவு ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. விளைநிலங்கள் சுருங்குவதை தடுக்கவும், வரும் தலைமுறைகள் விவசாயத்தை பயன்படுத்தி அதிக லாபம் பெறவும் தமிழக அரசு முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாயத்தை மையப்படுத்தி அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை போல் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து சட்டசபைகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கோவை அரசு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் கோவை, மதுரை, கிள்ளிகுளம், வல்லநாடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு வேளாண்மை கல்லூரி உள்ளது. இதுபோல் தமிழகத்தில் 30 தனியார் வேளாண்மை கல்லூரிகள் உள்ளன. குமரிமாவட்டமும் வேளாண்மை கல்லூரி அமைக்க ஏற்ற இடமாக உள்ளது. ஆனால் தோவாளை மலர் ஆராய்ச்சியகம், திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சியகம், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சியகம் இருக்கிறது என காரணமாக கொண்டு வேளாண்மை கல்லூரி திட்டம் கொண்டுவரப் படாமல் இருக்கிறதாம். தற்போது வேளாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. இதனை அதிக அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வது இல்லை. தற்போது வேளாண்மை துறையில் 841 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top