கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்

கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்

in News / Local

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு 60 நாள் தடை விதித்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது.

கிழக்கு கடலோர பகுதியில் உள்ள சின்ன முட்டத்தில் இருந்து சென்னை திருவள்ளூர் வரை கடந்த ஏப்ரல் 15–ந் தேதி முதல் ஜூன் 15–ந் தேதி வரை தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து, மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி உள்பட 40 கடலோர கிராமங்களில் மே 31–ந் தேதி நள்ளிரவு முதல் தடை காலம் தொடங்கியது.

வருகிற 31–ந் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது. விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால், குளச்சல், முட்டம் ஆகிய மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. கேரள கடல் பகுதியும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ளதால் கேரள சென்ற குமரி விசைப்படகினர் படகுகளை அங்கு நிறுத்தி விட்டு ஊர் திரும்பி உள்ளனர்.

இந்த தடை காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது, வலை போன்ற உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு கடற்கரை பகுதிகளில் வருகிற 31–ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் நீங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1–ந் தேதி அதிகாலை விசைப்படகுமீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல உள்ளனர்.

இதற்காக மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது சீரமைப்பது, வலைகளை தயார் செய்வது போன்ற ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிவடைந்ததும் டீசல், குடிநீர், ஐஸ் கட்டி ஆகியவற்றை படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top