தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வந்த கொற்றிக்கோடு குழிவிளையை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அவருடன் காரில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐ.டி. பெண் ஊழியருக்கு மட்டும் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 பேருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை.
இதே போல வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோ னா பாதித்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
0 Comments