பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்

பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்

in News / Local

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மயிலாடி ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ரவீந்திரன். இவர், சமீபத்தில் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலை ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் மெர்சி என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக தான் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். மெர்சி அந்த கடைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். வேலை பார்க்கும் இடத்தில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ரவீந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன் பின்னரும் அவர்கள் இருவரும் செல்போனில் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஆனாலும் ரவீந்திரன் இதுவரை வேறு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனை அறிந்த மெர்சி, அவரிடம் இருந்து விலக முடிவு செய்து, ரவீந்திரனிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ரவீந்திரன், மெர்சிக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். முன்பு போல எப்போதும் தொடர்ந்து பேசுமாறு வற்புறுத்தினார். ஆனால் மெர்சி மெல்ல மெல்ல பேசுவதை குறைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் நேற்று மாலை மெர்சிக்கு போன் செய்து, வள்ளியூர் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் மெர்சி மாலை 6.30 மணி அளவில் அந்த டீக்கடைக்கு வந்து நின்றார்.

அப்போது அங்கு நின்ற ரவீந்திரன், மெர்சியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவரது கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது ரவீந்திரன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவரை வள்ளியூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மெர்சியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மெர்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவலின் பேரில் வள்ளியூர் போலீசார், மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவீந்திரனை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top