நாகர்கோவிலில் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறித்த இளம்பெண் கைது!

நாகர்கோவிலில் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறித்த இளம்பெண் கைது!

in News / Local

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சந்திரா (வயது 32), வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்த மசாஜ் சென்டருக்கு குளச்சல் ஆலஞ்சியை சேர்ந்த காயத்ரி (24) என்பவர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

அப்போது சந்திராவுக்கும், காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். காயத்ரி தன் குடும்ப கஷ்டங்களை சந்திராவிடம் சொல்லி புலம்புவாராம்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்திராவை அவருடைய தோழி காயத்ரி சந்தித்தார். அப்போது தனக்கும், தன் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், எனவே ஒரு நாள் மட்டும் உன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்கும்படியும் சந்திராவிடம் காயத்ரி கேட்டுள்ளார்.

இதற்கு சந்திரா அனுமதி அளித்தார். இதனையடுத்து காயத்ரி பாதாம் பால் மற்றும் பர்க்கர் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி கொண்டு சந்திராவின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தான் வாங்கி வந்த பாதாம் பால் உள்ளிட்ட பொருட்களை சந்திராவுக்கு அவர் கொடுத்தார். இதை சாப்பிட்டதும் சந்திராவுக்கு மயக்கம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தபோது காயத்ரியை காணவில்லை. மேலும் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையும் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா தனது நகையை வீட்டில் பல இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அப்போதுதான் காயத்ரி மயக்க மருந்து கலந்த பாதாம் பால் மற்றும் பர்க்கரை கொடுத்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

தோழியாக பழகிய காயத்ரி, நகையை பறித்து சென்றதால் ஏமாற்றம் அடைந்த சந்திரா இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரியை கைது செய்தனர். மேலும் காயத்ரி வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top