குமரி மாவட்டத்தில், அரசு டாக்டர்கள் 4-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்!

குமரி மாவட்டத்தில், அரசு டாக்டர்கள் 4-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்!

in News / Local

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் தர்ணா போராட்டமும் நடத்தினர்.

இந்த போராட்டத்தையொட்டி அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற அத்தியாவசிய பிரிவுகளில் தேவையான டாக்டர்கள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பொது மருத்துவ பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் பயிற்சி டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 75 சதவீத டாக்டர்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 60 சதவீத டாக்டர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட டாக்டர்களும் என சுமார் 400 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் எங்களது போராட்டத்துக்கு பயிற்சி டாக்டர்களும், முதுநிலை பட்டதாரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குமரி மாவட்ட தலைவர் சுரேஷ்பாலன் தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top