குமரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டம்!

குமரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டம்!

in News / Local

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டி கையான ஓணம் பண்டிகை இன்று (11ம் தேதி) கொண்டாடப்படுகிறது. பண்டையகாலத்தில் இன்றைய கேரள மாநிலத்தை ஆண்டு வந்த மகாபலி மன்னர் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னர் ஓண பண்டிகை நாளில் தனது நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், செல்வ செழிப்புடனும் வாழ்வதை காணவருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் ஓணவிழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர்.

'காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடணும்' என்பது மலையாள பழமொழி ஆகும்.ஏழைகளாக இருந்தாலும் வீட்டில் சேகரித்துவைத்திருக்கின்ற தானியங்களில் ஒன்றான காணத்தை விற்றாவது ஓணப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது இதன் பொருளாகும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'அத்தம் பத்தினுபொன்னோணம்' என்று இதனை
அழைக்கின்றனர்.

கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக, உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. குமரிமாவட்டத்தில் பத்மனாபபுரத்தில் உள்ள கேரளா அரசுக்கு சொந்தமான அரண்மனையில் நேற்று முதல் ஓணம் விழா துவங்கியது. இந்த விழாவை பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி துவங்கி வைத்தார். பின்னர் அங்கு போடப்பட்டியிருந்த அத்தப்பூகோலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அரண்மனை ஊழியர்களுக்கான பிஸ்கெட் கடித்தல், செயர் சுற்றுதல், பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், வடம் இழுத்தல் போட்டிகளும் ஆண்களுக்கு சாரி உடுத்தல், கண்ணை கட்டி கொண்டு சுந்தரி பெண்களுக்கு பொட்டு வைத்தல் போட்டிகளும் நடந்தது.

பின்னர் மதியம் ஓண விருந்து நடந்தது. இதே போல் குமரி மாவட்டத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் ஓணம் பண்டிகை திருவிழா கலைக்கட்டியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கேரளா பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டும் ஓண ஊஞ்சாலாடியும் கொண்டாடி வருகிறார்கள்.

ஓணம் பண்டிகையொட்டி குமரி, சென்னை, கோவை மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top