வாலிபர் வீட்டில் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் - நாகர்கோவிலில் பரபரப்பு!

வாலிபர் வீட்டில் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் - நாகர்கோவிலில் பரபரப்பு!

in News / Local

நாகர்கோவில் கீழ கலுங்கடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் சஜீ (வயது 28). இவருடைய வீட்டில் துப்பாக்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை சஜீ வீட்டுக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் சஜீ வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.

அவரை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனாலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது வீட்டில் 2 துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 துப்பாக்கிகளும் வெவ்வேறு ரகத்தை சேர்ந்தவை. அதாவது ஒன்று கை துப்பாக்கியும் (பிஸ்டல்), மற்றோரு துப்பாக்கி சற்று நீளமாக இருந்தது. 2 துப்பாக்கிகளிலும் தலா ஒரு தோட்டா இருந்தது.

இதனையடுத்து 2 துப்பாக்கிகளையும், தோட்டாக்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த துப்பாக்கிகள் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே தப்பி ஓடிய சஜீவை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, 2 துப்பாக்கிகளையும் அவர், வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால் துப்பாக்கிகளை எதற்காக வாங்கினார் என்று போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. இதனால் வாலிபரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவருக்கு துப்பாக்கியை கொடுத்தவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கியை விலைக்கு வாங்கினாரா? அல்லது வேறு யாராவது துப்பாக்கியை இவரிடம் பதுக்கி வைக்க கொடுத்தாரா? என்பது தெரியவில்லை. போலீசாரிடம் சிக்கியுள்ள சஜீ கட்டிட வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவியும் உள்ளார். நாகர்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top