கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வேட்புமனு தாக்கல்!

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வேட்புமனு தாக்கல்!

in News / Local

நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்றீன் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தனர்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், நகர செயலாளர் மகேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி பகலவன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்துக்குள் வேட்பாளர் எச்.வசந்தகுமாருடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலரை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இதனால் வசந்தகுமாருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ஆகியோர் மட்டுமே சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில் வசந்தகுமார் தான் கொண்டு வந்திருந்த வேட்பு மனு மற்றும் ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அவர்கள் அதை சரிபார்த்து கொடுத்ததும், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அங்கு காத்திருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வசந்தகுமாரை தங்களது தோளில் தூக்கி வைத்து வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து இருந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் நேற்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி சார்பில் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியைச் சேர்ந்த ஜாக்சன் (44), காப்புக்காடு அருகில் உள்ள மறுகண்டான்விளையைச் சேர்ந்த சாந்தகுமார் (40), இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த ஜூலியஸ் (43) ஆகியோர் சுயேச்சையாகவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் உள்பட இதுவரை 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசிநாளாகும்.கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

கோட்டார் ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ், தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயர்களை சந்தித்து ஆதரவும், ஆசீர்வாதமும் பெற்றுள்ளேன். சரக்கு பெட்டக மாற்றுமுனைய துறைமுக திட்டத்தை கொண்டு வந்து குமரி மாவட்டத்தை அழிக்கக்கூடாது. எனவே சரக்கு பெட்டக மாற்று முனையம் நமக்கு தேவையில்லை. ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம்தான் தேவை. அதுதான் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். வளர்ச்சி என்பதை தாளில் எழுதி கொடுத்தால் அது திட்டம் ஆகாது. அந்த திட்டங்களை அவர் பட்டியலிட்டு சொல்ல வேண்டும். பா.ஜனதா ஏமாற்று கூடாரமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை மூடி சாலை அமைப்பது தவறு. எனக்கு ஒரு ரூபாய்கூட தேவையில்லை. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவதே எனது நோக்கம்.

நாங்குனேரி தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது தவறு. நான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் சரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுகத்தை தடுத்து நிறுத்துவதுதான் எனது முதல் பணி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். விளையாட்டுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top