கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி!

in News / Local

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளர் ஜெயன்றீன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. 6 சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் தனித்தனி அறைகளில் வைத்து பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளாக நடந்தது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவை விட முன்னிலையில் இருந்தது.

ஒவ்வொரு சுற்றுகள் முடிவிலும் எச்.வசந்தகுமார் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வந்தார். கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 26-வது சுற்றின் முடிவில் எச்.வசந்தகுமார் 5 லட்சத்து 98 ஆயிரத்து 948 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 3 லட்சத்து 46 ஆயிரத்து 931 வாக்குகள் கிடைத்தது. எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 17 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.

ஆனாலும் மீதமுள்ள 2 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி இருந்ததால் எச்.வசந்தகுமார் வெற்றி அறிவிப்பை வெளியிட தாமதம் ஆனது. இது போக ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 விவிபேட் கருவிகள் என மொத்தம் 30 விவிபேட் கருவிகளில் பதிவான வாக்குகளை ஒப்பிடும் பணியும், மாதிரி வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் கருவியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் மற்றும் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் மேற்கொள்ளப்பட இருந்ததாலும் நள்ளிரவு வரை எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.


இதற்கிடையே அமோக வெற்றி பெற்ற எச்.வசந்தகுமாரை கட்சியினர் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் வசந்தகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

எச்.வசந்தகுமாருக்கு கிடைத்த இந்த வெற்றியை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top