சுசீந்திரம் கோவில் திருவிழாவில்  நடக்க இருந்த அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்

சுசீந்திரம் கோவில் திருவிழாவில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை நாளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் அவற்றை ஒரு நாள் முன்னதாக மாற்றி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 22-ஆம் தேதி சனிக்கிழமை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டிருந்தது. அன்றைய உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜனவரி இரண்டாவது சனிக்கிழமையான 12-ம் தேதி அன்று வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய தேர்வுகள் டிசம்பர் 22-ம் தேதி அன்றுதான் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 21-ம் தேதியே நிறைவு பெற்று விடுகிறது. டிசம்பர் 22-ம் தேதி சனிக்கிழமையன்று 10-ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. மாதிரி தேர்வு கால அட்டவணை ஒன்று அனுப்பி வைக்கும்போது இதுபோன்ற உள்ளூர் விடுமுறை நாட்களின் தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்து திருத்தம் செய்ய விண்ணப்பித்தல் வழக்கம்.

ஆனால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் திருவிழா தேரோட்டம் அன்று மூன்று வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறுவதாக கால அட்டவணை வழங்கப்பட்ட வேளையில் கல்வித்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் குமரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் சென்னையில் பள்ளி கல்வி இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேர்வு தேதியை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top