நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியால் பல இடங்களில் விபத்து, பொது மக்கள் கடும் அவதி!

நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியால் பல இடங்களில் விபத்து, பொது மக்கள் கடும் அவதி!

in News / Local

கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கன்னியாகுமாரி மற்றும் நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காலை, மாலை நேரங்களில் மட்டும் அதாவது ஒன்றிரண்டு மணி நேரங்கள் மட்டுமே நீடித்து வந்த போக்கவரத்து நெரிசல் கடந்த சில நாட்களாக காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்கள் நகரில் ஊர்ந்துதான் செல்கின்றன. நாகர்கோவில் வடசேரி ரோடு, கேப் ரோடு, கோட்டார் ரோடு, கே.பி.ரோடு, கோர்ட்டு ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் வாகன நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன.

சில நேரங்களில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாமல் 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் என நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின்னர் சில அடி தூரம் ஊர்ந்து சென்று மீண்டும் நிறுத்தப்படுகின்றன. இம்மாதிரியான வேளைகளில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்படும்போது ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும் வாகனங்கள் முன்னும், பின்னுமாக மோதிக்கொள்கின்றன. இதுபோன்ற விபத்துகள் நேற்று நாகர்கோவில் நகரில் பல இடங்களில் நடந்தன.

முன்பெல்லாம் போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு வாகனப்போக்குவரத்து சீராக நடைபெறும் வகையில் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குச் சென்ற போலீசாரில் பெரும்பாலானோர் இன்னும் போலீஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு திரும்பவில்லை. பறக்கும்படையில் அமர்த்தப்பட்ட போலீசார் அந்த பணியை தொடர்கின்றனர். மேலும் ஏராளமான போலீசார் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களில் இருக்கும் போலீசாரில் பலர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கும் சென்று வருகின்றனர்.

இதனால் இருக்கின்ற போலீசாரை வைத்துதான் நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெறுகிறது. போலீஸ் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீஸ் நியமிக்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனாலேயே பல இடங்களில் போலீசார் இல்லாத நிலை உள்ளது. அந்தப்பகுதிகளில் வாகனங்கள் போட்டி, போட்டுக்கொண்டு ஒன்றொடொன்று முந்திச்செல்ல முயல்வதும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

எனவே, நகரில் போக்குவரத்து சீராக நடைபெற முக்கிய சந்திப்புகளில் போதுமான போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட காவல்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top