குமரியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

குமரியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

in News / Local

குமரி மாவட்ட கடல் பகுதியில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி கடல் சீற்றம், கடல் நீர் நிறம் மாறுதல், கடல் உள்வாங்குதல், நீர் மட்டம் தாழ்வு போன்ற பல இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தென்மேற்கு திசையில் இருந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அதே போல மேற்கு திசையில் இருந்து கேரள கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்படும். பலத்த காற்றும் வீசும் என்ற காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு அந்த ஊர் பங்கு தந்தைகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் சங்கங்கள் மூலமும் மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.

இன்று காலை முதலே குமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. ஆழ்கடல் பகுதியிலும், கடல் சீற்றமும் சூறாவளி காற்றும் காணப்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினார்கள். அவர்கள் கடும் சிரமத்துடனேயே தங்கள் விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்தனர்.

அதே சமயம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு விசைபடகுகள் மூலம் ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இன்று கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அந்த படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி, குளச்சல், மணக்குடி, ராஜாக்கமங்கலம், பள்ளம் போன்ற பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. 10 அடி முதல் 15 அடி வரை உயரம் உள்ள ராட்சஸ அலைகள் கடலில் எழும்பியது பார்ப்பவர்களை அச்சம் கொள்ளும் வகையில் இருந்தது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயனிக்ஸ்ல் தினமும் அதிகாலை முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம் பார்த்து விட்டு கடலில் நீராடி மகிழ்வார்கள். இன்று முக்கடல் சங்கமத்தில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததாள் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க சுற்றுலா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பெருங்கடல், அரபி கடலில் கடும் சீற்றமும், ராட்சத அலைகளும் காணப்பட்டாலும் வங்க கடல் அதற்கு நேர்மாறாக அமைதியாக காட்சி அளித்தது. மேலும் கடல் நீர்மட்ட தாழ்வும் உருவானது.

நீர் மட்ட தாழ்வு காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். ஆனால் இன்று காலை வழக்கமான நேரத்திற்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

நீர் மட்டம் தாழ்வு நீங்கி கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து நடைபெறும் என்று படகு துறை முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்க்கும் ஆசையில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top