வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் திடீர் போராட்டம்!

வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் திடீர் போராட்டம்!

in News / Local

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

முன்னதாக இந்து முன்னணியினர், விநாயகர் சிலை ஊர்வலத்தை மிக பிரமாண்டமாக நடத்தினர். தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகள் வாகனங்களில் பரைக்கோடு பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் ஊர்வலமாக மண்டைக்காடு கடற்கரைக்கு செல்ல இந்து முன்னணியினர் முடிவு செய்திருந்தனர்.

இதற்காக திக்கணங்கோடு பகுதியில் இருந்து இந்து முன்னணியினர் டெம்போவில் விநாயகர் சிலையை எடுத்து வந்தனர். திருவிதாங்கோடு நடுக்கடை பகுதியில் சென்ற போது, டெம்போவில் இருந்தவர்கள் பக்தி பாடல்களை பாடியபடி சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாக்கு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், சத்தம் போட்டு செல்லக்கூடாது என வாலிபர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் திடீரென ஒரு வாலிபரை லத்தியால் தாக்கியுள்ளார். இதனை டெம்போவில் இருந்த ஒருவர், செல்போனில் படம் பிடித்தார். பின்னர், பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பிறகு பரைக்கோடு பகுதியை சென்றடைந்ததும் வாலிபர்கள், அங்கிருந்த இந்து முன்னணி நிர்வாகிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

உடனே இந்து முன்னணியினர் அனைவரும் ஓன்று திரண்டு, வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்காமல் நிறுத்தி வைத்தனர். விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கல்குளம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதில் சமாதானம் அடைந்த இந்து முன்னணியினர் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தை தக்கலை ஒன்றிய இந்து முன்னணி துணை தலைவர் ஜாண்சன் தொடங்கி வைத்தார். மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர தலைவர் ரஞ்சித் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top