அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

in News / Local

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மூன்று திணைகளுக்கு முன்பு மாலை 3.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. நாகர்கோவில் ராணிதோட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் கண்டக்டராக இருந்தார். அந்த பஸ்சில் பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ்காரர்கள் மகேஷ் (25), தமிழரசன் (25) ஆகிய 2 பேர் கூடங்குளத்திற்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக ஏறி உள்ளனர்.

பஸ் நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தங்களிடம் வாரண்ட் இருப்பதாகவும், சிறிது நேரத்தில் நிரப்பி தருகிறோம் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் அதை நிரப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடத்துனர் அவர்களிடம் கேட்டபோது போலீஸ்காரர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர்கள் நடத்துனர் ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷ் காயமடைந்தார்.

உடனே பஸ்சை டிரைவர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். அங்கு இதுகுறித்து ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் மகேஷ், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். காயம் அடைந்த ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நாகர்கோவிலுக்கு சென்றார்.

இதற்கிடையே, போலீஸ்காரர்கள் 2 பேர் அளித்த புகாரின்பேரில், கண்டக்டர் ரமேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் கண்டக்டரை, போலீஸ்காரர்கள் தாக்கிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது, அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் நெல்லை மாவட்ட எஸ்பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தில் வரும் 29-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது, குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட காவல் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது .

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top