உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியையை கொன்றது ஏன்? கைதான கணவரின் பரபரப்பு வாக்குமூலம்!

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியையை கொன்றது ஏன்? கைதான கணவரின் பரபரப்பு வாக்குமூலம்!

in News / Local

குமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு புதுவிளை பகுதியை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ். இவருடைய மகன் பெல்லார்மின் (வயது 33). பேராசிரியர். இவருக்கும், திருவட்டார் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் மகள் திவ்யா சில்வஸ்டருக்கும் (29) கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாகவும், பெல்லார்மின் மார்த்தாண்டம் அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

திருமணமாகி ஒரு சில மாதங்கள் மட்டுமே திவ்யாவும், பெல்லார்மினும் சந்தோசமாக இருந்தனர். அதன் பிறகு பெல்லார்மினின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திவ்யாவுக்கும், பெல்லார்மினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் திவ்யாவை கொன்று விட்டு வேறொரு திருமணம் செய்ய பெல்லார்மின் சதி திட்டம் தீட்டினார்.

அதன்படி நேற்றுமுன்தினம் உப்புமாவில் விஷம் கலந்து திவ்யாவை கொலை செய்தார். உப்புமாவை சாப்பிட்ட நாயும் பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், உணவில் விஷம் கலந்து என்னுடைய மகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

திவ்யா கணவர் பெல்லார்மின் ஆன்லைன் மூலம் விஷம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த விஷத்தை உப்புமாவில் கலந்து திவ்யாவுக்கு கொடுத்ததும், விஷம் கலந்த உப்புமாவை சாப்பிட்ட திவ்யா கல்லூரிக்கு செல்லும் வழியில் இறந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெல்லார்மினை கைது செய்தனர். திவ்யாவை கொன்றது ஏன்? என்பது குறித்து பெல்லார்மின் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

திவ்யாவுடன் சேர்ந்து வாழ எனக்கு பிடிக்கவில்லை. இதற்காக அவருக்கு பல்வேறு இடைஞ்சல்கள் கொடுத்தேன். அப்படி கொடுத்தால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார். அதன் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் பல வகையில் நெருக்கடி கொடுத்தும், அவர்அதை சகித்து கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் திவ்யாவை கொலை செய்ய திட்டமிட்டேன். ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் குளிர்பானத்தில் பாதரசத்தை போட்டு கொல்ல முயன்றேன். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

திவ்யாவை கொலை செய்ய வேண்டும், ஆனால் போலீசிடம் சிக்க கூடாது என்பதற்காக இணையதளத்தில் பல தகவல்களை சேகரித்தேன். அந்த வகையில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து பவுடரை போல் உள்ள விஷத்தை வாங்கினேன். பின்னர், அந்த பவுடரை டீ, குளிர்பானம் போன்றவற்றில் கலந்து திவ்யாவை கொல்ல முயற்சி செய்தேன். ஆனால் திவ்யா குடிக்காததால் அவர் தப்பித்து விட்டார். ஆனால் உப்புமாவில் விஷம் கலந்ததை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் உப்புமாவை சாப்பிட்டதால் அவர் இறந்து விட்டார். இந்த கொலையில் போலீசாருக்கு என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி கொண்டேன்.

இவ்வாறு பெல்லார்மின் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட பெல்லார்மினை போலீசார் நேற்று இரவில் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top