குமரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் : ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு!

குமரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் : ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு!

in News / Local

குமரி மாவட்டத்தில் மின்வாரியம் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என 3 கோட்டங்களாக, செயற்பொறியாளர்களின் கீழ் செயல்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 56 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த பிரிவு அலுவலகங்களில் இருந்து சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக மின் வெட்டு அதிகம் இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் 9-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் 10-ந்தேதி காலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு பிறகு தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, எப்போது மின்சாரம் வரும் என்று கேட்டால் சரியான பதில் எதையும் கூறாமல் வரும் போது வரும் என்று அலட்சியமான பதிலை கூறுவதாகவும், சில அலுவலகங்களில் தொலைபேசியின் ரிசீவரை கீழே எடுத்து வைப்பதாகவும் பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக சில அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்டால் எங்களுக்கு எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாது என்றும், மேலிட உத்தரவுபடி தான் மின்தடை செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் தமிழக மின்துறை அமைச்சர் தமிழகத்தில் மின்வெட்டு என்பது அறவே இல்லை என்று கூறுகிறார். தற்போது குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மாவட்ட மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நிர்வாக சீர்கேட்டால் தான் ஏற்பட்டுள்ளதாக எண்ண தோன்றுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மின்வெட்டை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இதே போன்று மின்வெட்டு தொடரும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொது மக்களை திரட்டி அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் அரிக்கேன் விளக்கு ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top