நாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா நீதிபதி உள்பட 26 பேருக்கு பரிசோதனை

நாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா நீதிபதி உள்பட 26 பேருக்கு பரிசோதனை

in News / Local

நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள், மாவட்ட கோர்ட்டு, உரிமையியல் கோர்ட்டுகள், தலைமை குற்றவியல் கோர்ட்டு, மகிளா கோர்ட்டு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதில் உள்ள ஒரு கோர்ட்டில் 28 வயது ஆண், ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு காய்ச்சல் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

உடனே அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நோட்டீஸ் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் தலைமை குற்றவியல் கோர்ட்டு மற்றும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டன. மேலும் கோர்ட்டு வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோர்ட்டு வளாகத்தில் ஊழியர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நீதிபதி மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் என மொத்தம் 26 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மூடப்பட்ட கோர்ட்டு அறை மற்றும் அலுவலக அறை மீண்டும் கிருமி நாசினி தெளித்து 2 அல்லது 3 நாட்களுக்குப்பிறகு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top