குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு கண்டறியப்பட்டு வந்த கொரோனா தொற்று, தற்போது தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களையும் தாக்கி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கொரோனா களப்பணியில் இருந்த டாக்டர், நர்சுகள், லேப் டெக்னீசியன்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களுடைய குடும்பத்தினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா தொற்றுள்ளவர்கள் மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-
முளகுமூடு கிழக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த 32 வயது பெண், நாகர்கோவில் கோட்டார் கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆண், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையை சேர்ந்த 42 வயது ஆண், பறக்கையைச் சேர்ந்த 31 வயது ஆண், ஒழுகினசேரி கிழக்குத் தெரு 52 வயது ஆண், நாகர்கோவிலை சேர்ந்த 36 வயது ஆண், பூதப்பாண்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த 47 வயது ஆண், கோட்டார் பட்டாரியார் கோவில் தெருவை சேர்ந்த 49 வயது ஆண்,
இதே பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், சங்கரன்கோவில் அருகில் உள்ள தெற்கு பனவடலி சத்திரத்தைச் சேர்ந்த 27 வயது ஆண், தென்காசி அருகில் உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 27 வயது ஆண், வடசேரியைச் சேர்ந்த 25 வயது ஆண், தூத்தூரைச் சேர்ந்த 35 வயது ஆண், 47 வயது ஆண், 47 வயது மற்றொரு ஆண், 61 வயது முதியவர், கொல்லங்கோடு வள்ளவிளையை சேர்ந்த 33 வயது ஆண், பளிச்சவிளையைச் சேர்ந்த 32 வயது ஆண், பாகோடு ஆலுவிளையைச் சேர்ந்த 52 வயது பெண், நாகர்கோவில் கோணத்தைச் சேர்ந்த 25 வயது பெண், குலசேகரத்தைச் சேர்ந்த 22 வயது பெண், புத்தேரியைச் சேர்ந்த 75 வயது ஆண், 42 வயது ஆண் ஆகிய 23 பேர் ஆவர்.
இவர்களில் சங்கரன்கோவில் அருகில் உள்ள தெற்கு பனவடலி சத்திரத்தைச் சேர்ந்த 27 வயது ஆணும், தென்காசி அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 27 வயது ஆணும் போலீஸ்காரர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். அங்கு வந்து சென்றவர்கள் மூலமாக இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகளால் கூறப்படுகிறது. பூதப்பாண்டியைச் சேர்ந்த 47 வயது ஆண் மதுரையில் உள்ள மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். அவருக்கு மதுரையில் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் மதுரையில் இருந்தும், ஒருவர் திருச்சியில் இருந்தும் ரெயிலில் வந்துள்ளனர். கோட்டாரைச் சேர்ந்த 2 பேர் சவுதியில் இருந்து வந்துள்ளனர்.
பறக்கையைச் சேர்ந்தவர் தனது நண்பருடன் மதுரையில் இருந்து ரெயிலில் வந்துள்ளார். நாகர்கோவில் வந்தபிறகு அவர் வீட்டுக்குச் செல்லாமல் குளத்தூர் பகுதியில் உள்ள அவருடைய குடும்ப கோவிலில் தனிமைப்படுத்தி இருந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை மற்றும் ஊழியர்கள் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய நண்பரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அந்த கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோட்டீசும் ஒட்டப்பட்டது. கோவில் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரையில் பணிபுரியும் ஒருவர் தனது பெற்றோரை பார்ப்பதற்காக நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததும் அவரும், அவருடைய பெற்றோரையும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையிலான ஊழியர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மதுரையில் இருந்து வந்தவரின் பெற்றோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவருடைய வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுக்கு பின்புறத்தில் வசிப்பவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியை சேர்ந்த 33 வயது ஆசிரியருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு உள்ளது. அவர் சந்தேகமடைந்து கொல்லங்கோடு பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று சளி மாதிரிகளை எடுத்துள்ளார். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தபோது ஆசிரியருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மேலும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குமரி மாவட்டத்தில் மொத்தம் 253 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று 3 பேர் முழுமையாக குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments