பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானது எப்படி : தகவல்

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானது எப்படி : தகவல்

in News / Local

பேச்சிப்பாறை அருகே குற்றியார் பகுதியை சேர்ந்தவர் சஜின் சலோ (வயது 22). இவருடைய நண்பர்கள் மன்மோகன்(20), சுபாஷ் (19). இவர்கள் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பலியானார்கள். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

பேச்சிப்பாறை கோதையாறு அருகே உள்ள மலையோர கிராமம் குற்றியார். இங்கு வசிப்பவர்கள் ரப்பர் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு பேச்சிப்பாறையில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் இங்கு மழைகாலங்களில் மரங்கள் அடிக்கடி சரிவதால் மின்வெட்டு ஏற்படுவது உண்டு. இந்த நிலையில் குற்றியார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாலை மழை பெய்தது. இதனால் மின்சாரம் இல்லாமல் கிராமமே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இரவு நேரமாகியும் மின்சாரம் வராததால், சஜின் சலோ, அவருடைய நண்பர்கள் மன்மோகன், சுபாஷ் ஆகிய 3 பேரும் மரம் எதுவும் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதா? என பார்ப்பதற்காக சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் “பியூஸ்“ சரியாக உள்ளதா? என பார்ப்பதற்காக சஜின் சலோ அதில் ஏறினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதனை கண்ட மன்மோகன், சுபாஷ் ஆகியோர் சஜின் சலோவை காப்பாற்ற சென்றனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. சில நொடிகளில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் கடையாலுமூடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சஜின் சலோவின் தந்தை சதீஷ்குமார் அரசு ரப்பர் பால் வெட்டும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். சஜின் சலோ புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்த போது பரிதாபமாக பலியானார், நண்பர்கள் மன்மோகன் லாரி டிரைவராகவும், சுபாஷ் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top