குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குறுதி

குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குறுதி

in News / Local

குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குறுதி அளித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று குளச்சல் சட்டசபை தொகுதி வேட்பாளர் பிரின்சுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார். குளச்சல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திங்கள்நகர் பகுதியில் இருந்து பிரசாரம் தொடங்கப்பட்டது.

பின்னர் இரணியல், மேல்கரை, பட்டன்விளை, ஆரோக்கியபுரம், தலக்குளம், நடுத்தேரி, கல்லுக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது:-

என் தந்தை வசந்தகுமாரின் கனவுகளை நினைவாக்கவும், குமரி மாவட்ட மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கும் எனக்கு வாய்ப்பு தாருங்கள். மத்திய அரசு கடந்த காலங்களில் கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏராளமான வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். நானும் ஒரு வியாபாரி. மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களால் வியாபாரிகள் எவ்வளவு பாதிப்பு அடைந்து இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

என் தந்தை ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள க‌‌ஷ்டங்களை நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அவர் வழியில் நானும் வியாபாரிகளின் துயர் துடைக்கவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் கை சின்னத்தில் வாக்களியுங்கள். கொரோனா துயரில் இருந்து மீண்டு வருவதற்குள் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தி மக்களை மிகப்பெரிய சுமைக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த முறை குமரி மாவட்ட மக்கள் 2 வாக்குகள் அளிக்க வேண்டும். ஒன்று நாடாளுமன்றத்திற்கும், மற்றொன்று சட்டமன்றத்திற்கும் வாக்களிக்க வேண்டும். இதில் கன்னியாகுமரி நாடாளுமன்றத்திற்கு விஜயகுமார் என்ற விஜய் வசந்த் ஆகிய எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

நான் வெற்றி பெற்றவுடன் குளச்சலில் ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும். எல்லா விசைப்படகுகளும் கரையுடன் தொடர்பு கொள்ள செயற்கைக்கோள் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். மீன்பிடி உபகரணங்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும். குளச்சல் பகுதியில் கயிறு தொழிற்சாலை உருவாக்கப்படும்.

இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள ஏராளமான இளைஞர்களும் பெண்களும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக அனைத்து பகுதிகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top