நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

in News / Local

நாகர்கோவில், இடலாக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகாதில், பத்திரம் பதிவதற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, ரெமா மற்றும் போலீசார் நேற்று இரவு 8.30 மணிக்கு அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்தனர். தனி தாசில்தார் பாண்டியம்மாள் முன்னிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சார்பதிவாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சார்பதிவாளர் ஈஸ்வரன், தான் வைத்திருந்த பணத்தை எடுத்து அவசர, அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளியே வீசினார். அந்த சமயத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து சார்பதிவாளர் ஈஸ்வரன் வெளியே வீசிய பணத்தை போலீசார் சேகரித்தனர். மொத்தம் ரூ.21 ஆயிரம் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் பின்னர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் சோதனை நடத்தினர். இளநிலை உதவியாளர் கண்ணனிடம் ரூ.2,100, பத்திர எழுத்தர் ராமநாதனிடம் ரூ.25 ஆயிரத்து 500, பத்திர எழுத்தரிடம் வேலை பார்க்கும் ஊழியர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்து 440 போன்ற கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ஏராளமான பணமும் கீழே கிடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் ஊழியர்கள் பணத்தை கீழே போட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மொத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணமாக ரூ.71 ஆயிரத்து 275 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் குறித்து சார்பதிவாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்ட போது, அவர்கள் முறையான பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய பத்திர எழுத்தரிடம் மேலும் ஆயிரக்கணக்கான பணம் இருந்துள்ளது. அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியதால் அந்த பணம் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனை மற்றும் பணம் பறிமுதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அதுதொடர்பாக அவர்கள் உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய சார்பதிவாளரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி ஆகும். அவர் தற்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top