கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்டம்!

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்டம்!

in News / Local

கன்னியாகுமரி கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன், தான் எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சிவபெருமானை பார்த்து கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் ஒற்றைகாலில் தவம் இருந்தார். அந்த பாறையில் அம்மனின் கால்தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால்தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார்.

இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. முடிந்து, 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி நினைவு மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த மண்டபம் நிறுவி வருகிற (செப்டம்பர்) 2-ந் தேதியுடன் 49 ஆண்டுகள் முடிந்து 50-வது ஆண்டு தொடங்குகிறது. அதனால், இந்த பொன்விழா கொண்டாட்டத்தை ஒரு ஆண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா “மகா சம்பர்க்க அபியான்“ என்ற பெயரில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.

விவேகானந்த கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்கள். அப்போது, அங்கு விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பரமேஸ்வர், துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், செயலாளர் அனுமந்தராவ், இணை பொதுச்செயலாளர்கள் பிரவீன் தபோல்கர், ரேகாதவே மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top