கூடங்குளம் அருகே மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, கடலில் விழுந்து மாயமான மீனவர் பிணமாக மீட்பு!

கூடங்குளம் அருகே மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, கடலில் விழுந்து மாயமான மீனவர் பிணமாக மீட்பு!

in News / Local

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியைச் சேர்ந்த மீனவர் டிலைட் (வயது 50) உள்ளிட்டவர்கள் கடந்த 5-ந்தேதி நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனர். அப்போது குமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கும், கூத்தங்குழி மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது டிலைட் இயக்கிய நாட்டுப்படகு மீது சின்னமுட்டம் மீனவர்கள் விசைப்படகை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்த டிலைட் மாயமானார். அவரது கதி என்ன? என்று இதுநாள் வரை தெரியாமல் இருந்தது. அவரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே பெரியதாழை கடலில் நேற்று மாலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஓன்று மிதந்தது. அந்த பிணத்தை மீனவர்கள் நாட்டுப்படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அவர் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் டிலைட்டாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து, இறந்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர் டிலைட் தான் என்று அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கூத்தங்குழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top