குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் விபத்து; வாலிபர் சாவு!

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் விபத்து; வாலிபர் சாவு!

in News / Local

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணியினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

அதன்படி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது இரவிபுதூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை டெம்போவில் அப்பகுதி இளைஞர்கள் எடுத்து வந்தனர்.

வழுக்கம்பாறை அருகே டெம்போ வந்த போது, அதில் இருந்த வாலிபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவர் மீது டெம்போவின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் உடல் நசுங்கி உயிருக்கு போராடிய அவரை உடனே நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்..

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது இறந்த வாலிபரின் பெயர் விக்னேஷ் (வயது 24), இரவிபுதூரை சேர்ந்த தாணப்பன் மகன் என்று தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல் திங்கள்நகரில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் மண்டைக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த ஊர்வலத்தில் சென்ற ஒரு டெம்போவை குளச்சல் அருகே கூத்தாவிளையை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் ஓட்டினார். அந்த டெம்போ லெட்சுமிபுரத்தை தாண்டி பருத்திவிளை பகுதியில் செல்லும்போது, அதில் இருந்த கூத்தாவிளையை சேர்ந்த ராபர்ட் (29) என்பவர் தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு ராபர்ட்டுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டெம்போ டிரைவர் ஞானதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top