கியார் புயல் எச்சரிக்கை: குமரியை சேர்ந்த 754 படகுகள் கரைக்கு திரும்பின!

கியார் புயல் எச்சரிக்கை: குமரியை சேர்ந்த 754 படகுகள் கரைக்கு திரும்பின!

in News / Local

கியார் புயல் கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள மீட்புக்குழு உபகரணங்கள் (மணல் மூடை, ஜெனரேட்டர், மரம் வெட்டும் கருவி, பொக்லைன் எந்திரம்) சரிப்பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதோடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வானிலை அறிக்கை தொடர்பாக குமரி மாவட்ட மீனவர்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கை மீன்துறை மூலமாகவும் அனைத்து கடலோர மீனவ அமைப்புகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குளச்சல் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம், தூத்தூர் மீன்துறை ஆய்வாளர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறையின் தொடர் நடவடிக்கையின் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 770 படகுகளை தொடர்பு கொண்டு புயல் பற்றிய முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து அரபிக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 754 படகுகள் பத்திரமாக அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்பி உள்ளன. மீதமுள்ள படகுகளில் 10 படகுகள் விரைவில் கரைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 படகுகள் மகாராஷ்டிராவுக்கு எதிரே உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் உள்ளது. அந்த படகுகளையும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை மூலம் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்ககடல் மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதற்காக மீன்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 15 துறை அலுவலர்களை கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன. இந்த குழுக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து புயல் முன்னெச்சரிக்கை பணிகளையும், மீனவர்களை புயல் மற்றும் வெள்ள காலங்களில் பாதுகாக்கும் பொருட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top