தக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.

தக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.

in News / Local

குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திவ்யாவுக்கும், தக்கலை அருகே வெள்ளிகோடு புதுவிளை பகுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ் மகன் பெல்லார்மினுக்கும் (33) திருமணம் நடந்தது. பெல்லார்மின் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆன 2 மாதங்களிலேயே, அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்துள்ளது.

திவ்யா கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சடையங்கால் பகுதியை சென்றடைந்த போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார்.

உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல் பரவ ஆரம்பித்தது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த கருங்கல் போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக திவ்யா உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே திவ்யா வீட்டில் உள்ள நாய் உப்புமாவை சாப்பிட்டு விட்டு இறந்து கிடந்தது. இதனால் திவ்யா சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதுதொடர்பாக பெல்லார்மினிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்தது. விசாரணையில், தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை கூறினார். உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணையும் நடைபெறுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top