டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு!

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு!

in News / Local

நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..

நேற்று முன்தினம் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது, மேலும் இந்த மதுக்கடையை சுற்றிலும் வயல்களும், தென்னந்தோப்புகளும் உள்ளதால் இந்த பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மதுக்கடையை திறப்பதற்காக ஊழியர் சென்றார். ஆனால் அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் எனில் மதுக்கடையின் பின் பக்க சுவரை யாரோ மர்ம நபர்கள் துளைபோட்டு கடையினுள் புகுந்து புகுந்த விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுபற்றி உடனடியாக வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்த 63 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனையடுத்து மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்று மதுக்கடை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மதுக்கடையின் பின்புறம் 3 மதுபாட்டில்கள் கிடந்தன. ஏராளமான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றபோது இந்த 3 பாட்டில்களை எப்படியோ தவறவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 3 மதுபாட்டில்களிலும் இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மதுக்கடைகளில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன. மதுக்கடை சுவரில் துளைபோட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மதுபாட்டில்கள் திருட்டு போன மதுக்கடையில் ஏற்கனவே 4 முறை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது 5-வது முறையாக அதே மதுக்கடையில் மீண்டும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மதுபானங்களை திருடியது மட்டும் அல்லாது கடையின் அருகே மர்ம நபர்கள் அமர்ந்தபடி மது அருந்தி விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top