சேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி!

சேலத்தில் காருக்குள் பிணமாக கிடந்த இளம் காதல் ஜோடி!

in News / Local

சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், வயது 22. இவரும் தந்தையுடன் சேர்ந்து அவரது வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவியான ஜோதிகா(20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ், ஜோதிகா ஆகிய 2 பேரும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி அவர்கள் 2 பேரும் திடீரென மாயமாகினர். இதனிடையே, ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் அருகே கோபியின் கார் நிறுத்தும் இடத்தில் காருக்குள் சுரேஷ், ஜோதிகா ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களுடைய உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷ், ஜோதிகா ஆகிய 2 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் சுரேசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜோதிகாவின் உடலை அவருடைய வீட்டில் வைத்திருந்தனர். அமெரிக்காவில் உள்ள அவருடைய அக்காள் நேற்று சேலம் வந்ததும், பின்னர் ஜோதிகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. காதல் ஜோடி தற்கொலை குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சுரேஷ், ஜோதிகா காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஜோதிகாவிற்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்த ஜோதிகா இதுகுறித்து தனது காதலனிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து உள்ளனர். அதன்படி சுரேஷ், ஜோதிகா 2 பேரும் கார் நிறுத்தும் இடத்தில் சந்தித்து சாக்லெட்டில் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனாலும் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதை கண்டறிய காதல் ஜோடியின் உடற்கூறுகள் சிலவற்றை ஆய்வுக்காக மரவனேரியில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்த ஆய்வு முடிவுகள் விரைவில் கிடைத்து விடும். அதற்கு பின் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற விவரம் தெரியவரும். மேலும் சுரேஷ், ஜோதிகா தற்கொலை செய்வதற்கு முன்பு யார், யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பதை அறிய கோர்ட்டு மூலம் அவர்களுடைய செல்போன்களின் சிம் கார்டை ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர். மேலும் காதல் ஜோடி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top