காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும் -  எச்.வசந்தகுமார்!

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும் - எச்.வசந்தகுமார்!

in News / Local

வரும் 18ஆம் தேதி தமிழகத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று திற்பரப்பு பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி திற்பரப்பு மகாதேவர் கோவில் அருகில் நடந்தது.

நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின் போது திறந்த வாகனத்தில் நின்றபடி வேட்பாளர் எச்.வசந்தகுமார் பேசியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை கூட்டணி கட்சியினரும் குடும்பமாக ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். காங்கிரஸ் இயக்கம் மக்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்க இருக்கிறது.

மத்தியில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும். மேலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு அனைத்து மக்களுக்கும் நன்மை செய்யும் ஆட்சி காங்கிரஸ் ஆட்சி தான்.

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். யாருக்கும் வேலை தரவில்லை. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார். அதுவும் போடவில்லை.

எனவே காங்கிரஸ் கட்சி மட்டும் தான் சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் பாதுகாக்கிற இயக்கமாக இருக்கிறது. அத்தகைய காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.

தொடர்ந்து அவர் திற்பரப்பு சந்திப்பு, காமூர், சேக்கல், பிணந்தோடு, மாடத்தூர் கோணம், ஆணைகட்டிவிளை, கோட்டூர்கோணம், திருநந்திக்கரை, மணியங்குழி, பேச்சிப்பாறை, குலசேகரம், அரசமூடு, மங்கலம், பொன்மனை, பெருஞ்சாணி, சுருளக்கோடு, வெண்டலிகோடு, அண்டூர், மலவிளை, அருவிக்கரை, புத்தன்கரை, இட்டகவேலி, நாகக்கோடு, காவல்ஸ்தலம், செருப்பாலூர், குலசேகரம் சந்தை போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருடன் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top