மதுரை விஜய் ரசிகரின் கலங்கடித்த போஸ்டர்…புரட்சித் தலைவர் விஜய்…புரட்சித் தலைவி சங்கீதா…!

மதுரை விஜய் ரசிகரின் கலங்கடித்த போஸ்டர்…புரட்சித் தலைவர் விஜய்…புரட்சித் தலைவி சங்கீதா…!

in News / Local

நடிகர் விஜய்யை புரட்சித் தலைவராகவும், அவரது மனைவி சங்கீதாவை புரட்சி தலைவியாகவும் ரசிகர் ஒருவர் ஓட்டியுள்ள போஸ்டர் மதுரையை கலங்கடித்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் தாண்டவமாடி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விமானம், ரயில், பஸ் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கொரோனா காலத்திற்கு முன்பே விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் முடிவடைந்தது. மார்ச் மாதம் அந்த படம் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால் கொரோனா தொற்றால் படம் வெளியாவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மாஸ்டர் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர். திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய் ரசிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. “கொரோனா தொற்று பரவி வருவதால் தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை” என்று கூறிவிட்டார்.

இதனிடையே, நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைபோற்று’ திரைப்படம் சூட்டிங் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இந்த படத்தை வெளியிடாமல் சூர்யா தவித்து வருகிறார். திரையரங்குகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை. அப்படி திறந்தாலும் பொதுமக்கள் திரையரங்குக்கு வந்த படத்தை பார்ப்பது கடினம்தான் என்று நினைத்த சூர்யா, வரும் 30ம் தேதி அமேசான் ஓஓடி-யில்சூரரைபோற்று’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, எக்காரணம் கொண்டும் ‘மாஸ்டர் ‘ படத்தை ஓஓடியில் வெளியிடக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனத்தை விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய்யின் திருமண நாளையொட்டி மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், புரட்சித் தலைவரே என்றும், புரட்சி தலைவியே வாழிய பல நூற்றாண்டு என்றும் எழுதப்பட்டுள்ளது. அதோடு, எம்ஜிஆர் முகத்தை மறைத்து விஜய்யின் முகமும், ஜெயலலிதா முகத்தை மறைந்து விஜய்யின் மனைவி சங்கீதாவின் முகமும் கிராப்பிக்ஸ் மூலம் வரையப்பட்டுள்ளது.

போஸ்டரின் இடது பக்கத்தின் கீழே மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கே.கில்லிசிவா என்று அச்சிடப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த போஸ்டர் ஓட்டிய கில்லி சிவா கூறுகையில், “சாதாரண நடிகராக இருந்து ரசிகர்களால் அண்ணனாக அழைக்கப்பட்டு தற்போது தளபதியாக இருக்கும் விஜய்யை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்காகவே இப்படி ஒரு போஸ்டரை வடிவமைத்து ஓட்டினேன்” என்கிறார். இந்த போஸ்டரால் விஜய் மக்கள் இயக்கம் தலைமையில் இருந்து கில்லி சிவாவுக்கு ரிவீட் வைத்ததாக கூறப்படுகிறது.

“கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வரும் நிலையில், இப்படிப்பட்ட போஸ்டர்களை அச்சடிப்பதை விட்டுவிட்டு வறுமையில் தவிக்கும் மக்களுக்கு நடிகர்களின் ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top