குமரி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்த காங்கிரஸ் பிரமுகர் கைது!

குமரி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்த காங்கிரஸ் பிரமுகர் கைது!

in News / Local

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 34). இவர் குலசேகரம் அருகே பிணந்தோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு ரூ.500-ஐ ஊழியரிடம் கொடுத்தார்.

அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது, உடனடியாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் ரதீஷை பிடித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ரதீஷிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த நோட்டை தனக்கு கொடுத்தவர், ஆற்றூர் தோட்டாவரம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (39) என்றும், அவருடைய கடையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டதற்காக அவர் அந்த பணத்தை கொடுத்ததாகவும் ரதீஷ் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் ஜார்ஜ் பற்றிய தகவல்களை சேகரித்தனர். காங்கிரஸ் பிரமுகரான இவர், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவராக இருந்தவர். தற்போது திருவட்டார் அருகே காங்கரை சந்திப்பு பகுதியில் ரத்த பரிசோதனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் அங்குள்ள ஒரு அறையில் அவர் ஜெராக்ஸ் எந்திரமும் வைத்திருந்தார்.இப்படி பல வகையில் ஜார்ஜை கண்காணித்த வந்த போலீசார், திடீரென அவருடைய கடைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 2 ஆயிரம், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்தது தெரிய வந்தது. கள்ள ரூபாய் நோட்டுகள், அச்சு, அசல் நோட்டுகளை போன்று இருந்தது. அந்த வகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 9-ம், 500 ரூபாய் நோட்டுகள் 12-ம் இருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

குலசேகரம், மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் ஜார்ஜ் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜை கைது செய்தனர். இந்த கள்ளநோட்டுகள் விவகாரத்தில் ஜார்ஜிக்கு மட்டும் தொடர்பு இருக்கிறதா? இல்லை வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பை எட்டி இருக்கும் நிலையில் குமரியில் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top