மோட்டார் சைக்கிளில் கேமரா பொருத்தி கால்வாயில் குளித்த பெண்களை படம் பிடித்த வாலிபர் - பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு!

மோட்டார் சைக்கிளில் கேமரா பொருத்தி கால்வாயில் குளித்த பெண்களை படம் பிடித்த வாலிபர் - பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு!

in News / Local

தோவாளையில் உள்ள கால்வாயில் அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தினமும் குளிப்பது வழக்கம். இந்த கால்வாயில் பெண்கள் குளிப்பதற்காக தனியாக படித்துறை உள்ளது. இந்த படித்துறையின் அருகே சில நாட்களாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும், ஒரு வாலிபர் காலையிலும், மாலையிலும், மோட்டார் சைக்கிளின் அங்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

அந்த வாலிபரின் நடவடிக்கை அந்த பகுதியில் குளித்த பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பெண்கள் தங்களின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் கண்காணிக்க தொடங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல், பெண்கள் குளிக்கும் இடத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் மோட்டார் சைக்கிள் தொடர்பாக விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

தொடர்ந்து, பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் முன்பகுதியில் ரகசிய கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமரா மூலம் பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கி படம் எடுப்பது போல் வைக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாலிபரை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செண்பகராமன்புதூர் பாரதிநகர் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த கேமராவை போலீசார் சோதனை செய்தபோது அதில் பல பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வாலிபர் பல நாட்களாக கால்வாயில் பெண்கள் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top