பணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர்

பணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர்

in News / Local

நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் நாகை அருகே உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜித்தேந்திரகுமார் அந்தப் பகுதியில் நகைக்கடை மற்றும் அடகுகடை நடத்தி வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், பலருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி உடலில் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் ஜித்தேந்திர்குமார் இறந்து கிடந்தார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர். ஜித்தேந்திர்குமார் இறந்ததில் இருந்தே நகைக்கடைக்கு அருகில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை தொடர்ந்து பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது, தினேஷ்குமார், வலிப்பு வந்ததைப் போல நடித்துள்ளார். பின்னர், போலீசார் அவரை உரிய முறையில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ஜித்தேந்திர்குமாரிடம், தினேஷ்குமார் சுமார் 8 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்று, கடந்த ஒரு ஆண்டாக வட்டியும் அசலையும் கொடுக்காமல் அலைகழித்து வந்துள்ளார். பொறுமையிழந்த ஜித்தேந்திர்குமார், தினேஷ்குமார் வீட்டிற்குச் சென்று சத்தம் போடவே, மூன்று தினங்களுக்குள் பணத்தை திரும்பக் கொடுக்கப்பதாக உறுதியளித்திருக்கிறார் தினேஷ்குமார். ஆனால் நினைத்தப்படி பணத்தை திரட்ட முடியாததால் ஜித்தேந்திர்குமாரை தீர்த்துக் கட்டுவதே ஒரே வழி என முடிவெடுத்த தினேஷ்குமார், தனது நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த ஜித்தேந்திர்குமாரை, காரில் நண்பருடன் சென்று வழிமறித்த தினேஷ்குமார், சன்னாநல்லூரில் தனது நண்பர் பணத்தோடு காத்திருப்பதாக கூறி ஜித்தேந்திர்குமாரை காரில் ஏற்றிச் சென்றுள்ளார். வழியில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கேபிள் ஒயரால் ஜித்தேந்திர்குமாரின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார்.

பின்னர் விபத்து நடந்தது போல ஜித்தேந்திர்குமாரின் உடலில் காயங்களை ஏற்படுத்தி, ஜித்தேந்திர்குமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விபத்தில் அடிப்பட்டு உயிரிழந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். தினேஷ்குமாரையும், கொலைக்கு உதவிய அவரது நண்பர் தீபக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top