சொத்துக்காக தந்தையை கொன்ற டாஸ்மாக் ஊழியருக்கு ஆயுள் தண்டனை, நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துக்காக தந்தையை கொன்ற டாஸ்மாக் ஊழியருக்கு ஆயுள் தண்டனை, நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

in News / Local

சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை சேர்ந்தவர் பொன்னையா (வயது 72). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். பொன்னையாவின் மகன் விஜயகுமார் (39). இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் பொன்னையாவிடம், விஜயகுமார் அடிக்கடி சொத்து கேட்டு தகராறு செய்து வந்தார். ஒருமுறை தகராறில் பொது பொன்னையாவை, விஜயகுமார் தாக்கியுள்ளார்.

இதையடுத்து பொன்னையா வழுக்கம்பாறையில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்து வெளியேறி, ஈத்தாமொழி அருகே உள்ள குமராண்டி தருவையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருடன் பொன்னையாவின் மகள் சுகுமாரியும் குடியிருந்தார். அதன் பிறகும் விஜயகுமார் மதுபோதையில் குமாரண்டி தருவைக்கும் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதே போல் 19-3-2014 அன்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது பொன்னையா வசித்து வந்த வீட்டுக்குள் புகுந்த விஜயகுமார், சுகுமாரியின் உடைகளை வெளியே போட்டு தீ வைத்து கொளுத்தினார்.

இதை பொன்னையா தட்டிக்கேட்டார். அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய விஜயகுமார் அடித்து, உதைத்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயில் தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் பலன் இன்றி உயிரிழந்தார். சிகிச்சையில் இருக்கும்போது அவர் மரணவாக்குமூலமும் அளித்திருந்தார்.

பின்னர் சுகுமாரி அளித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் விஜயகுமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி அப்துல்காதர் விசாரித்து வந்தார்.

அவர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அப்போது பொன்னையாவை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பொருட்களை தீ வைத்து எரித்த குற்றத்துக்காக 7 ஆண்டு தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும் நீதிபதி அப்துல்காதர் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜரானார்.

இந்த வழக்கின் புகார் தாரரான சுகுமாரி தந்தை இறந்த பிறகு வழுக்கம் பாறையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரிடம் விஜயகுமார் என்மீது நீ எப்படி புகார் கொடுக்கலாம் என்று கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இவரின் தொல்லை தாங்காமல் சுகுமாரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top