மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் செங்கல்சூளையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!

மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் செங்கல்சூளையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!

in News / Local

தக்கலை அருகே குமாரகோவில் ஆலஞ்செடி பகுதியில் ஒரு செங்கல்சூளை உள்ளது. நேற்று அந்த செங்கல்சூளைக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற போது, செங்கல்சூளையின் அருகில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

அப்போது, பிணமாக கிடந்தவரின் பேண்ட் பையில் இருந்த ஆதார் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் வில்லுக்குறி கோவில்விளாகம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுயம்புலிங்கம் (வயது 49) என்பது தெரியவந்தது. பின்னர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து சுயம்புலிங்கத்தின் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

சுயம்புலிங்கத்துக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், சூர்யா, சுசி என்ற 2 மகள்களும் உள்ளனர். சூர்யாவுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். சுசிக்கு வருகிற 26-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு . இதற்காக, அழைப்பிதழ்கள் அச்சிட்டு உற்றார், உறவினர்களுக்கு சுயம்புலிங்கம் வழங்கி வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர், தக்கலை ஆலஞ்செடி பகுதியில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுயம்புலிங்கத்தின் தாயார் சொர்ணம் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயம்புலிங்கம் தற்கொலை செய்தாரா? அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் செங்கல்சூளையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top