கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரியைச் சேர்ந்த மாவோயிஸ்டு அஜிதா உடல் கேரளா போலீசாரால் தகனம் செய்யப்பட்டது!

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரியைச் சேர்ந்த மாவோயிஸ்டு அஜிதா உடல் கேரளா போலீசாரால் தகனம் செய்யப்பட்டது!

in News / Local

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில் தண்டர்போல்டு என்ற சிறப்பு அதிரடிப்படை போலீசுக்கும், மாவோயிஸ்டுக்கும் இடையே கடந்த மாதம் 28-ந் தேதி கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அந்த சண்டையின் பொது சேலம் தீவட்டிபட்டியை சேர்ந்த மாவோயிஸ்டு முக்கிய தலைவர் மணிவாசகம், புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் மற்றும் ரீமா என்கிற அஜிதா, கர்நாடகாவை சேர்ந்த அரவிந்த் என்கிற சுரேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காயம் அடைந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக், லட்சுமி உள்பட 3 பேர் தப்பிச்சென்றனர். அதில் தீபக்கை தமிழக அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட 4 மாவோயிஸ்டுகளின் உடல் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் மணிவாசகம், கார்த்திக் ஆகியோரின் உடலை அவர்களது உறவினர்கள் வாங்கிச்சென்றனர். சுரேஷ் மற்றும் அஜிதா உடல்கள் அங்குள்ள பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

அஜிதா குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார், தமிழக போலீசாருடன் இணைந்து அஜிதா வீட்டிற்கு சென்று அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அஜிதாவின் உடலை வாங்கிச்செல்லுமாறு கூறினார்கள்.

ஆனால்அவர்கள், காணாமல்போன அஜிதா, மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்ததால் அவருடைய உடலை வாங்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்றுக்கூறி மறுத்துவிட்டனர். இதையடுத்து கேரள போலீசாரே அஜிதாவின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலையில் போலீசார் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் வைக்கப்பட்ட அஜிதாவின் உடலை போலீசார் பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது அந்த உடலுக்கு கேரளாவை சேர்ந்த போராட்டம் என்ற அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கோவையில் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேசின் மனைவி சைனா உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் போலீசார் அஜிதாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அந்தப்பகுதியில் உள்ள ஒரு மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இதையொட்டி அந்த மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் 4 பேரில் 3 பேரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. சுரேஷ் தொடர்பான முழு தகவல் கிடைக்கவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும்தான் கிடைத்து உள்ளது. ஆனால் அவருடைய உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே அவருடைய உடல் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top