பாராக மாறியுள்ள மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் படிக்கட்டு

பாராக மாறியுள்ள மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் படிக்கட்டு

in News / Local

மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் செயல் பட்டு வந்த பஸ் நிலையம் இடநெருக்கடியால் மார்க்கெட் சாலையில் உள்ள காளைச் சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது. பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அருகே படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டு வழியாக பஸ் நிலையத்தின் பின்புறம் சாத்தனாங்குழி செல்லும் சாலைக்கு செல்லலாம். அதுபோல இந்த சாலை வழியாக வருபவர்கள் சுற்றி செல்லாமல் படிக்கட்டுகள் வழியாக எளிதில் பஸ் நிலையம் வரலாம்.

மிகமுக்கியமான இப்படிக்கட்டு பகுதி தற்போது பராமரிக்கப்படாமல் கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இப்படிகள் வழியாக பொது மக்கள் செல்ல முடியாத அளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் 'குடி'மகன்க ளின் பாராகவும் இப்பகுதி செயல் பட்டு வருகிறது. அந்த பகுதியில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. - மேலும் 'குடி'மகன்கள் உட்பட பலரும் இந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனாலும் சீர்கேடு அடைந்துள்ளது. இதனால் சாத்தனாங்குழி சாலையில் செல்பவர்கள் கூட இப்பகுதியில் மூக்கை பொத்திக்கொண்டு ஓட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. -

இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் நடந்து வருவதாக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே பொது மக்கள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியை சுத்தப்படுத்தி, சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். பஸ் நிலையத்துக்கு வரும் போலீஸ், அருகில் உள்ள இந்த பகுதிக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் இப்பகுதியில் ரோந்து சென்று சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும். மேலும் 'குடி'மகன்களின் பாராக செயல்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top