மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை கட்டி போட்டு வாக்கு சீட்டுகளை எரித்த மர்ம கும்பல்!

மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை கட்டி போட்டு வாக்கு சீட்டுகளை எரித்த மர்ம கும்பல்!

in News / Local

மார்த்தாண்டம் வெட்டுமணியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேன் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 7.5.2018-ல் நடந்தது. இதில், தி.மு.க. தரப்பிலும், அ.தி.மு.க. தரப்பிலும் போட்டியிட்டனர். அவர்களில் சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் தனி அறையில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் வாக்கு எண்ணிக்கை வருகிற 24-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் கூட்டுறவு சங்கத்தில் புகுந்து. அங்கு பணியில் இருந்த காவலாளி கனகராஜை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த மரத்தில் அவரை கட்டி வைத்தனர். தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும் சேதப்படுத்தினர்.

பின்னர், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்து, அங்கு இருந்த வாக்கு பெட்டியை உடைத்து அதில் இருந்த வாக்கு சீட்டுகளை கீழே கொட்டி எரித்து சாம்பலாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து நேற்று காலையில் அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கூட்டுறவு சங்கத்திற்கு அருகில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களில் மர்ம கும்பலின் உருவம் பதிவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்காக அந்த கேமரா காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு சீட்டுகள் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top