குலுக்கல் முறையில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி!

குலுக்கல் முறையில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி!

in News / Local

ராமநாதபுரம்: குலுக்கல் முறையில் சரஸ்வதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சரஸ்வதி என்ற பெண் உள்பட 5 நபர்கள் போட்டியிட்டனர். இந்த ஊராட்சிக்கு கடந்த 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் வேட்பாளரும் 614 வாக்குகள் பெற்றிருந்தனர்.

இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனையடுத்து இரண்டு வேட்பாளர்களையும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவழைத்த அதிகாரிகள், அங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் பேப்பரில் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

சீட்டு குலுக்கிப் போட்டதில் சரஸ்வதி பெயர் வரவே, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சரஸ்வதியின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top