களியக்காவிளையில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலத்தில் புகுந்து மர்மக்கும்பல் தாக்குதல் - 2 பேருக்கு கத்தி குத்து !

களியக்காவிளையில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலத்தில் புகுந்து மர்மக்கும்பல் தாக்குதல் - 2 பேருக்கு கத்தி குத்து !

in News / Local

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பனங்காலையை சேர்ந்தவர் சனுபிரசாத் (வயது 25). இவருடன் ட உண்ணி, அஜித், பிரமோத், அகில், அபிலேஷ், வினோ, பிரசாந்த் உள்பட 11 பேர் நேற்று மாலை சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டுடன் பனங்காலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களுடன் ஏராளமான உறவினர்களும் சென்றனர்.

இந்த ஊர்வலம் களியக்காவிளை சந்திப்பை வந்தடைந்ததும் அய்யப்ப பக்தர்கள் வேனில் ஏறி சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஊர்வலம் களியக்காவிளை ஆர்.சி. தெரு அருகே வந்த போது ஒரு திடீரென ஒரு கும்பல் அந்த ஊர்வலத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது, பின்னர் அங்கிருந்த அய்யப்ப பக்தர்களை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அய்யப்ப பக்தர்களின் உறவினர்களான பிரசாந்த் (22), ஜெரின் (20) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடினர். தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.

அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் கத்திக்குத்து விழுந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் களியக்காவிளை சந்திப்பில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் நீடித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அய்யப்ப பக்தர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பப்பட்டது. போலீசாரும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த பகுதியில் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

காயமடைந்த அய்யப்ப பக்தர்கள் சிலரும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். களியக்காவிளை பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top